வரலாறு
விருதுநகர் மாவட்டம் 15.3.1985 அன்று ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர் தனி மாவட்டத் தலைமையகமாக உருவாக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் 4243 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டம் மேற்கில் கேரள மாநிலத்தாலும், வடக்கே மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களாலும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டத்தாலும், தெற்கே திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களாலும் எல்லைகளாக உள்ளது.விருதுநகரில் உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய் மிளகாய்வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து தொடர்வண்டி மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன.
திருவில்லிபுத்தூர் பழமையான வரலாற்று நகரங்களில் ஒன்றாகும். 1000 ஆண்டுகள் பழமையான கோவில்/ 200 ஆண்டுகள் பழமையான இந்து பள்ளி/ 135 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் பொது நூலகம் ஆகியவை இந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நகரத்திற்கு குறிப்பிடத்தக்க வரலாற்று சான்றுகளாகும். தமிழ் இலக்கிய காலத்தின் முக்கிய அங்கமான திருப்பாவை இந்த கோவில் நகரத்தில் இருந்து வந்தது. வடபத்ரசாயி என்று அழைக்கப்படும் திருவில்லிபுத்தூர் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்கு கோபுர அமைப்பு திருவில்லிபுத்தூரின் குறிப்பிடத்தக்க அடையாளமாகும். இந்த கோவிலின் கோபுரம் 192 அடி உயரத்தில் உள்ளது மற்றும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக உள்ளது. திருவில்லிபுத்தூரில் உள்ள மற்றொரு அதிசயம் ஆதிபுரத்தில் ஓடும் தேர். திருவில்லிபுத்தூரின் வரலாறு தென்னிந்தியாவின் 12 ஆழ்வார் துறவிகளில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளுக்கு (8ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய) அர்ப்பணிக்கப்பட்L திருவில்லிபுத்தூர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ளது. திருவில்லிபுத்துாரில் பால்கோவா என்ற இனிப்புத் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. செண்பகத்தோப்பு திருவில்லிபுத்துாரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதியாகும்.இங்கு சாம்பல் நிற அணில்களுக்கு புகழிடமாகத் திகழ்கிறது.பிற சுற்றுலா தலங்களான தாணிப்பாறை சதுரகிரிமலை, பிளாவக்கல்அணை அமைந்துள்ளது.
சிவகாசி பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.
திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கியமான வழியான தேசிய நெடுஞ்சாலை 45-பி, அருப்புக்கோட்டை வழியாக செல்கிறது.
வளர்ப்பு நாய் வகைகளில் இராசபாளையம் நாய் மிகவும் அறியப்பட்ட இந்திய நாட்டு நாய் இனமாகும். இங்கு பல நூற்பு ஆலைகள் உள்ளன. பருத்திச்சந்தையும் குறிப்பிடத்தக்கது. அய்யனார் அருவி , சஞ்சீவி மலையும் இங்கு புகழ்பெற்றது.
சாத்துா் எட்டு கி.மீ. தொலைவில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. சாத்தூரில் தயாரிக்கப்படும் காரச்சேவு மிகவும் பிரசத்தி பெற்றது,.சாத்தூரில் வைப்பாறு ஒன்று உள்ளது.
திருச்சுழி இரமண மகரிசி அவதரித்த புண்ணியதலமாகும்.